தொகாநிலைத் தொடர்கள்
‘இளமுருகன் படிக்கிறான்’ - இத்தொடரைப் படித்துப் பாருங்கள். ‘இளமுருகன்’ என்னும் எழுவாயும், ‘படிக்கிறான்’ என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
1. கபிலன் வந்தான் - இச்சொற்றொடரில் ‘கபிலன்’என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தான்’ என்னும் பயனிலை வந்துள்ளதனால், இஃது எழுவாய்த்தொடர்.
2. கதிரவா வா! - இது விளித்தொடர்.
3. கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில்வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத்தொடர்.
4. விழுந்த மரம் - ‘விழுந்த’ என்னும் எச்சவினை ‘மரம்’ என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதனால், இது பெயரெச்சத்தொடர்.
5. வந்துபோனான் - ‘வந்து’ என்னும் எச்சவினை ‘போனான்’ என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர்.
6. வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதனால், இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
7. மற்றொன்று - மற்று + ஒன்று. ‘மற்று’ என்னும் இடைச்சொல்லை அடுத்து ‘ஒன்று’ என்னும் சொல் தொடர்ந்து வந்ததனால் இஃது இடைச்சொற்றொடர்.
8. மாமுனிவர் - இத்தொடரில் ‘மா’ என்பது உரிச்சொல். இதனைத் தொடர்ந்து, ‘முனிவர்’ என்னும் சொல் வந்துள்ளதனால், இஃது உரிச்சொற்றொடர்.
9. வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்குப் பலமுறை அடுக்கி வந்துள்ளதனால், இஃது அடுக்குத்தொடர். இவையெல்லாம் தொகாநிலைத் தொடர்கள்.
தொகாநிலைத்தொடர்கள்
1. எழுவாய்த்தொடர்
2. விளித்தொடர்
3. வினைமுற்றுத்தொடர்
4. பெயரெச்சத்தொடர்
5. வினையெச்சத்தொடர்
6. வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
7. இடைச்சொற்றொடர்
8. உரிச்சொற்றொடர்
9. அடுக்குத்தொடர்
“முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள்
ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை” - நன்னூல், 374
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்
அடுக்குத்தொடர்
ஒரு சொல்லானது இரண்டுக்கு மேற்பட்ட முறை அடுக்கி வரும்.
பிரித்தால் பொருள் தரும்.
அசை நிலைக்கும், விரைவு, சினம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள் நிலைக்கும், செய்யுளில் ஓசையை நிறைவு செய்வதற்கும் ஒரு சொல் இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.
இது விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள் காரணமாகவும் வரும்.
அன்றே அன்றே – அசை நிலை
போ போ – விரைவு
எறி எறி - சினம்
வருக வருக – மகிழ்ச்சி
தீ தீ தீ – அச்சம்
நொந்தேன் நொந்தேன் - துன்பம்
கோடி கோடி கோடி கோடியே – இசை நிறை
பாம்பு பாம்பு – அச்சம்
குத்து குத்து – வெகுளி (சினம்)
வாழ்க வாழ்க – மகிழ்ச்சி
ஓடு ஓடு – விரைவு
ஐயோ ஐயோ – துன்பம்
பிற எ.கா - அவரவர், எடும் எடும், ஐயைந்து
இரட்டைக்கிளவி
இரட்டித்து நின்று பொருள் உணர்த்தும் சொற்கள் இரட்டித்தே வரும் பிரித்தால் பொருள் தராது. இதனை இரட்டைக் கிளவி என்பர். (கிளவி –சொல்) ( இரட்டைக் கிளவி – இரண்டு சொல்)
இது அடைமொழியாய்க் குறிப்புப்பொருளில் வரும்.
எ.கா
பாவை படபடவெனப்பேசினாள்
கலா கலகலவெனச் சிரித்தாள்
வேற்றுமை
1. முருகன் வந்தான்.
2. முருகனைப் பார்த்தான்.
3. முருகனால் வரையப்பட்டது.
முதல் தொடரில் முருகன் என்னும் பெயர் எழுவாய்.
இரண்டாம் தொடரில் முருகன் என்னும் பெயர் செயப்படுபொருள்.
மூன்றாம் தொடரில் முருகன் என்னும் பெயர் செயப்படுபொருளாகவும்
கருத்தாவாகவும் வேறுபடுகிறது.
இவ்வாறு பெயரை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும். அவ்வேற்றுமை எண் வகைப்படும்.
எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை
‘முகிலன் வந்தான்’ என்பது ஒரு தொடர். இத்தொடரில் முகிலன் என்பது எழுவாய். இந்த எழுவாய், வந்தான் என்னும் பயனிலையை ஏற்று இயல்பாக வருகிறது. இந்த எழுவாய் வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றுள் ஒன்றனைப் பயனிலையாகக்கொண்டு முடியும். இவ்வாறு வருவது எழுவாய் வேற்றுமை அல்லது முதல் வேற்றுமை எனப்படும். இதற்கு உருபு இல்லை.
(எ.கா.)
1. மாடு வந்தது - வினைமுற்றைக்கொண்டு முடிந்தது.
2. வளவன் என் தம்பி - பெயர்ப்பயனிலையைக் கொண்டு
முடிந்தது.
3. வளர்மதி யார்? - வினாப்பெயர்ப் பயனிலையைக்கொண்டு
முடிந்தது.
இரண்டாம் வேற்றுமை - ஐ
‘முருகேசன் செடியை நட்டான்’ இத்தொடரில் முருகேசன் என்பது எழுவாய். ‘செடி’ என்பதும் பெயர்ச் சொல்லே. அஃது ‘ஐ’ என்னும் உருபை ஏற்றுச் செயப்படுபொருளை உணர்த்துகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர். இதன் உருபு ‘ஐ’.
அஃது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
தேன்மொழி கோவிலை அடைந்தாள் - அடைதல்
குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை
மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு
இவை தம்மையேற்ற பெயர்ப்பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். இவற்றுள் ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
(எ.கா.)
நாரால் கயிறு திரித்தான்.
முதற் கருவி (காரியமாக மாறி அஃதாகவே இருப்பது).
கையால் கயிறு திரித்தான்.
துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது.)
இதேபோல் கருத்தாவும் இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா என
இருவகைப்படும்.
(எ.கா.)
1. தச்சனால் நாற்காலி செய்யப்பட்டது - இயற்றுதல் கருத்தா. (தானே செய்வது.)
2. கோவில் அரசனால் கட்டப்பட்டது. - ஏவுதல் கருத்தா - (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது.)
உடனிகழ்ச்சி
ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடனிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
(எ.கா.)
தாயொடு குழந்தை சென்றது.
நாயொடு குட்டியும் சென்றது.
கருவிப்பொருளில் கொண்டு என்னும் சொல்லும் உடனிகழ்ச்சிப் பொருளில் உடன் என்னும் சொல்லும் சொல்லுருபுகளாக வரும்.
(எ.கா.)
நூல்கொண்டு தைத்தான்.
ஆறுமுகனுடன் வள்ளி சென்றாள்.
நான்காம் வேற்றுமை - ‘கு’
இது கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருளில் வரும்.
(எ.கா.)
1. புலவர்க்குப் பரிசு கொடுத்தார். - கொடை
2. நோய்க்குப் பகை மருந்து. - பகை
3. பாரிக்கு நண்பர் கபிலர். - நட்பு
4. வீட்டுக்கு ஒரு பிள்ளை. - தகுதி
5. வளையலுக்குப் பொன். - அதுவாதல்
6. கூலிக்கு வேலை. - பொருட்டு
7. கோவலனுக்கு மனைவி கண்ணகி. - முறை
8. திருத்தணிக்கு வடக்கே வேங்கடம். - எல்லை
‘கு’வுக்குப் பதிலாகப் பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகளாக வரும்.
(எ.கா.) கூலியின்பொருட்டு வேலை செய்தான்.
வேலையின் நிமித்தம்அயலூர் சென்றான்.
கு உடன் ஆக என்பதும் சேர்ந்து வரும்.
(எ.கா.) கூலிக்காக வேலை செய்தான்.
ஐந்தாம் வேற்றுமை - இல், இன்
இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருள்களாக வேறுபடுத்தும்.
(எ.கா.)
1. தலையின் இழிந்த மயிர் - நீங்கல்
2. பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
3. சென்னையின் மேற்கு வேலூர் - எல்லை
4. அறிவில்மிக்கவர் ஔவை - ஏது
இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
(எ.கா.)
1. வேலன் ஊரிலிருந்து வந்தான். - இருந்து
2. அரசன் தேரினின்று இறங்கினான். - நின்று
3. கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
4. தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? - காட்டிலும்
ஆறாம் வேற்றுமை - அது, ஆது, அ
அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும்.
(எ.கா.)
1. எனது வீடு.
2. எனாது நூல்.
3. தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரண்டு. ஆறாம் வேற்றுமைக்கு உடைய என்பது சொல்லுருபாக வரும்.
(எ.கா.)
1. என்னுடைய வீடு.
2. நண்பனுடைய சட்டை.
ஏழாம் வேற்றுமை - கண், கால், மேல், கீழே, இடம், இல்
(எ.கா.)
1. மணியில் ஒலி. - இல்
2. வீட்டின்கண் பூனை. - கண்
3. அவனுக்கு என்மேல் வெறுப்பு. - மேல்
4. பெட்டியில் பணம் உள்ளது. - இல்
குறிப்பு: ‘இல்’ என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு ஒப்பு, ஏது, நீங்கல் ஆகிய பொருளில் வரும். ஏழாம் வேற்றுமை உருபு இல் இடப்பொருளில் வரும்.
(எ.கா.)
1. மாலையில் மலர்கள்- இல் ஏழாம் வேற்றுமை உருபு இடப்பொருளில் வந்தது.
2. மாலையிலிருந்து மலரைப் பிரித்தான்- இல் ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்கல் பொருளில் வந்தது.
எட்டாம் வேற்றுமை - விளிவேற்றுமை
படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளிவேற்றுமை என வழங்குவர்.
(எ.கா.) கண்ணா வா!, கிளியே பேசு!
வினாக்க
அடிச்சொல்லிலிருந்து சொற்களை உருவாக்குதல்
வா - அடிச்சொல் படி - அடிச்சொல்
வந்தான் - வினைமுற்று படித்தான் - வினைமுற்று
வந்த - பெயரெச்சம் படித்த - பெயரெச்சம்
வந்து - வினையெச்சம் படித்து - வினையெச்சம்
வருதல்-தொழிற்பெயர் படித்தல்-தொழிற்பெயர்
PDF FILE FREE DOWNLOAD CLICK HERE
Tags
TAMIL NOTES