தொகைநிலைத் தொடர்கள்
சொற்கள் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் எனப்படும், எ.கா கார்குழலி பாடம் படித்தாள். இத்தொடரில் உள்ள மூன்று சொற்களும் தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன.
சொற்கள் தொடராகும்போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும். இங்ஙனம் உருபுகள் மறைந்து வரும் தொடர்களைத் ‘தொகைநிலைத் தொடர்கள்’ என்பர்.
‘கயல்விழி’. இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை உவமைத்தொகை எனக்கூறுவர்.
தொகை நிலைத்தொடர் அறுவகைப்படும்.
1. வேற்றுமைத்தொகை,
2. வினைத்தொகை,
3. பண்புத்தொகை,
4. உவமைத்தொகை,
5. உம்மைத்தொகை,
6. அன்மொழித்தொகை என்பன.
1. வேற்றுமைத்தொகை
பெயரின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் உருபுக்கு வேற்றுமை உருபு என்பது பெயர்.
இவ்வேற்றுமைகள் எண்வகைப்படும்.
இவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை.
மற்ற வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன.
இரண்டாம் வேற்றுமை உருபுமுதல் ஏழாம் வேற்றுமை உருபுவரை உள்ளனவற்றுள் ஏதேனும் ஒன்று வேற்றுமை உருபாய் வரும்.
இருசொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதனை வேற்றுமைத்தொகை என்கிறோம்.
எ.கா
1. பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் + ஐ + பருகினான்- இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது.) தமிழ் கற்றான், தானம் செய்வார், பசிக் காண்பான், பழிமலைந்து, பொருள் செய்து, உலகளித்தான், கரைகண்ட, சினங்காக்க
2. தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத்தொகை (தலை + ஆல் + வணங்கினான்) கைதொழுது, கல்லெறிந்து,
3. வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத்தொகை (வேலன்+ கு + மகன்) என் மகன், தந்தை மகன், நோய் மருந்து, பாம்பு கீரி பகை
4. ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை (ஊர் + இன் + நீங்கினான்) மலை வீழ் அருவி,
5. செங்குட்டுவன் சட்டை - ஆறாம் வேற்றுமைத்தொகை (செங்குட்டுவன் + அது + சட்டை)தமிழ்பண்பு, அவன் வண்டி, குணநலம், மலர் நீட்டம், மலையுச்சி, அவன்தாய், யானை எருத்தம்
6. குகைப்புலி - ஏழாம் வேற்றுமைத்தொகை (குகை + கண் + புலி) இல்லிருந்தான்,
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைகள்
வேற்றுமை உருபோடு வேறு ஒரு சொல் மறைந்து வருவது வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
தயிர்க்குடம் - தயிரை உடைய குடம் -
(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
பூக்கூடை – பூவை உடைய கூடை -
(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
முட்செடி – முள்ளை உடைய செடி -
(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
விரைமலர் - விரையை உடைய மலர்
- (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
ஒளிக்கல் – ஒளியை உடைய கல் - (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
வளநகர் - வளத்தை உடைய நகர் -
(இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
மட்கலம் - மண்ணால் ஆகிய கலம்
- (மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
அடுப்புப் புகை – அடுப்பினின்று எழும் புகை - (ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
வான்ரவி – வான் கண் உடைய ரவி -
(ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
வயிற்றுத் தீ – வயிற்றின் கண் தோன்றிய தீ - (ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை )
வினைத்தொகை
இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
முதல்சொல் வினை அடிச்சொல் அல்லது வினை வேர்ச்சொல்லாக இருக்கும்.
இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம், வினைத்தொகை எனப்படும்.
உண்கலம் இத்தொடரைப் படித்துப் பாருங்கள். இதனை உண்டகலம், உண்கின்ற கலம், உண்ணும் கலம் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் கொள்ளலாம். ஆடுகொடி, பாய்புலி, அலைகடல் ஆகிய தொடர்கள் வினைத்தொகை பயின்று வந்த தொடர்கள்.
எ.கா
நீள் புகழ், செல்லிடம், உறைநிலம், ஆழ்களர், வருநிதி, ஒழுகுநீர், செய்குன்று, புனைகழல், நலிசோரன், ஒடுங்குயிர், நிகழ்மாற்றம், தோய்தடக்கை, களிநடம், தாழ்பிறப்பு, ஈண்டுபுகழ், எரிதரங்கம், கொடுவானம், குளிர்மழை, அருகுளம், அகல்வயல், ஓங்குமலை, அலைகடல், படர்முகில், நீளிடை, விரிமலர், விடுகனை, விளங்கொளி, அடுதிரை, அகல்முகில், உயர்எண்ணம்.
காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை - நன்னூல், 364
பண்புத்தொகை
இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
முதல்சொல் பண்பு பெயராக இருக்கும்.
இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
இரண்டு சொற்களுக்கும் இடையே ஆகிய (ஆன) என்னும் பண்புருபு மறைந்து வரும்.
வெண்ணிலவு, சதுரக்கல், இன்சுவை இச்சொற்றொடர்களைப் படித்துப் பாருங்கள். வெண்மை, சதுரம், இனிமை ஆகிய பண்புப் பெயர்கள் நிலவு, கல், சுவை ஆகிய பெயர்ச்சொற்களோடு சேர்ந்து வரும்போது இரண்டிற்கும் இடையில் ‘ஆகிய, ஆன’ என்னும் பண்பு உருபுகளும் ‘மை’ விகுதியும் தொக்கி (மறைந்து) வந்துள்ளன. எனவே, இவை பண்புத்தொகை பயின்று வந்த தொடர்கள்.
(எ.கா) வெண்மை + நிலவு = வெண்ணிலவு.
பிற.எகா
நல்லறம், அரும்பொருள், வண்பயன், நெடும்புனல், நெடுந்தேர், சிறும்படை, அறவினை, வெண்குடை, தீந்தமிழ், பேரண்டம், செந்தாமரை, இருநிதி, செவ்வேள், பெருங்குறவர், பெருநிலம், பெருமகன், வண்கை, பழங்குடி, கருநிறம், நறுஞ்சுவை, வெற்றிடம், செங்கண், பெருந்தடம், நல்லிணக்கம், வெங்கதிர், வெங்கணல், செங்கை, சேவடி, வெவ்விருப்பு, வண்மறவர், முத்தமிழ், பெருந்தகை, நானிலம், புன்மனம், கொடுமனம், தீமொழி, வன்நெஞ்சு, நற்றவம், சிறுகோடு, பெரும்பழம், பழம்பாடல், தொல்லுலகம், வெண்சாமறை, தொல்கவின்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை (வல்லினம் மிகும்)
இது பண்புத் தொகையின் ஒரு வகையாகும்.
இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
முதல்சொல் சிறப்பு பெயர்ச்சொல்லாக இருக்கும்.
இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மல்லிகைப்பூ என்னும் சொல்லைப் பார்ப்போம். மல்லிகை என்பது சிறப்புப்பெயர். பூ என்பது பொதுப்பெயர். இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
பச்சைப் பட்டு – இருபெயரொட்டு பண்புத் தொகை
பச்சை பட்டு - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
எ.கா
சாரைப்பாம்பு, தமிழ்மொழி, கோரைப்புல், தைத்திங்கள், அவியுணவு, தவத்தொழில், அரிமான், பெண்மைநலம், அந்திமாலை, உரைக்கல், அறவினை, மாமரம், மடித்தலம், பாரதநாடு, வேற்படை, கற்புக்கடம், முண்டக மலர், செருக்களம், அவைக்களம், இமயப்பொருப்பு
உம்மைத்தொகை
கபிலபரணர், உற்றார் உறவினர். இத்தொடர்கள் கபிலரும் பரணரும், உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள்தருவதனால், உம்மைத் தொகை எனப்பட்டது.
எண்ணும்மை
உம் என்னும் உருபு வெளிப்படையாக வந்து ஒன்றுக்கு மேற்பட்டவற்றை எண்ணப்பயன்படுமானால் அது எண்ணும்மை எனப்படும். இத்தொடரில் இரண்டும் இரண்டுக்கு மேற்பட்ட உம் வரும்.
எ.கா
சேரரும் சோழரும் பாண்டியரும், அன்பும் அறனும், கற்பும் காதலும், காயும் கனியும், ஆக்கமும் கேடும், யாயும் ஞாயும்
முற்றும்மை
முற்றுப்பொருளை தருவதற்காக வருகின்ற உம் முற்றும்மை ஆகும். இது முழுவதும் என்னும் பொருளைத் தரும்.
எ.கா
பாண்டவர் ஐவரும், முப்பழமும், முத்தமிழும், எல்லா அறமும், திசையோரும், மூவேந்தரும்
உயர்வு சிறப்பும்மை
உயர்வை மேலும் உயர்வுபடுத்துவதற்காகவும், ஒன்றின் உயர்வைக் கூறவும் பயன்படும் உம் உயர்வு சிறப்பும்மை எனப்படும்.
எ.கா
தேவரினும், ஊழையும், குறவரும் அஞ்சும் குன்று, அரசனும் விரும்பும், தேனினும், ஊனினும், வானினும், வானோர்க்கும், நெடுங்கடலும், தானமும்
இழிவு சிறப்பும்மை
ஒன்றின் இழிந்த தன்மையை விளக்குவதற்காகவும், இழிவு பொருளை மேம்படுத்துவதற்காகவும் அல்லது சிறப்பிப்பதற்காகவும் வருகின்ற உம் இழிவு சிறப்பும்மை என்படும்.
எ.கா
நாயும் விரும்பாது, பொய்மையும், இழப்பினும், இடுக்கண்படினும், நாயினும்
அன்மொழித்தொகை
‘கயல்விழி வந்தாள்’. இத்தொடரில் முதலில் உள்ள ‘கயல்விழி’ என்பது, ‘கயல் போன்ற விழி’ என்னும் பொருளைத் தரும் உவமைத்தொகை ஆகும். ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நின்றதனால், ‘கயல்போன்ற விழியை உடைய பெண் வந்தாள்’ எனப் பொருள் தருகிறது. இதில் ‘உடைய’, ‘பெண்’ என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம்.
இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்
உவமைத் தொகை
இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல் போல இருக்கும்.
முதல் சொல் உவமைச் சொல்லாக இருக்கும்
இரண்டாம் சொல் பொருள் சொல்லாக இருக்கும்
இவற்றுக்கிடையே உவம உருபு (போல, அன்ன, இன்ன) மறைந்து வரும்
எ.கா
மதிமுகம், நச்சுமனம், தொன்னைஉள்ளம், பொய்குயம், மலரடி, துவரை உள்ளம், கமலக்கண், தேன்தமிழ், கனிவாய், குமுதவாய், வாள் மீசை, துடியிடை, கயல்விழி,
உருவகம்
இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல் போல இருக்கும்.
முதல் சொல் பொருள் சொல்லாக இருக்கும்
இரண்டாம் சொல் உவமைச் சொல்லாக இருக்கும்
இடையே ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வரும்
எ.கா
நாயக கடவுள், அகந்தைகிழங்கு, களிவெள்ளம், நீர்வேலி, உளக்கோவில், அரவணை, உயிரோவியம், குழற்காடு, களிவெள்ளம், பனிப்போர்வை, ஞானக்கண், பசிப்பிணி, கரமலர்கள், சிந்தை ஆலயம், உவகைத் தேன், முனிவெனும் ஆழி, மானிட சமுத்திரம், வறுமை நோய்
உவமை, உருவக மாற்றம்
உவமை என்பது, ஒரு பொருளை அல்லது நிகழ்வை மற்றொரு பொருளோடு அல்லது நிகழ்வோடு ஒப்புமைப்படுத்துவது. உவமை, உவமிக்கும் பொருளைவிட உயர்ந்தது. உவமைத்தொடரில் உவமை முன்னும், பொருள் பின்னுமாக வரும்.
எ.கா - மதி போன்ற முகம்: மதி – உவமை; முகம் - (உவமேயம்) பொருள் கவிஞர், தாம் கருதிய பொருளையும் ஒப்புமைப் பொருளையும் (உவமையையும்) வெவ்வேறு எனக் கூறாமல், இரண்டும் ஒன்றெனக் கூறுவது உருவகம்.
உருவகத்தொடரில் பொருள் முன்னும், உவமை பின்னுமாக வரும்.
எ.கா - முகமதி: முகம் - பொருள்; மதி – உவமை. இங்கு இரண்டும் ஒன்றெனக் கூறப்பெற்றது.
உவமை உருவகம்
தாமரைமுகம் முகத்தாமரை
தேன்மொழி மொழித்தேன்
பவளவாய் வாய்ப்பவளம்
முத்துப்பல் பல்முத்து
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈற்றெழுத்து கெட்டு வரும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் எனப்படும்.
இது ஆ என்னும் எழுத்தில் முடியும். ஆ விற்கு அடுத்துப் பெயர்ச்சொல் இருக்கும். எதிர்மறை பொருளைத் தரும்.
எ.கா
எய்தாப் பழி, நாறா மலர், பயவாக் கன்று, தங்கா வேட்கை, மாறா அன்பு, குறைவிலா மறையோர், சிந்தாமணி, வசையிலா வாழ்க்கை, தீதிலா விடமீன், பொய்யா மொழி, செல்லாக் காசு, பொல்லாத் தீவினை, புனையா ஓவியம், மாலறியாத் திருவடி, குற்றமில்லா வாழ்க்கை, அறியாப் பழங்குடி
PDF FILE FREE DOWNLOAD CLICK HERE
வாழ்த்துகள்
Tags
TAMIL NOTES