வினைச்சொல்
பொருள்களின் செயலை, இயக்கத்தை, வினையை உணர்த்தும் சொற்கள் வினைச் சொல் எனப்படும்.
எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்கள்
வினைச் சொல் காலத்தை உணர்த்தும், ஆனால் வேற்றுமை உருபை ஏற்காது.
எ.கா
வந்தான், நடந்தான்
வினைமுற்று
முற்றுபெற்று வந்துள்ள வினைச் சொற்களை வினைமுற்று என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.
வினைமுற்று எழுவாய்க்கு பயனிலையாய் அமையும்.
முக்காலங்களில் ஒன்றை உணர்த்த்தும்.
திணை, பால், எண், இடங்களை காட்டும்.
வினைமுற்று இரண்டு வகைப்படும்
- தெரிநிலை வினை முற்று
- குறிப்பு வினைமுற்று
1. தெரிநிலை வினை முற்று
செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் தெரிவித்து காலத்தை வெளிப்படையாக காட்டுவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
எ.கா
உழுதான்
செய்பவன் - உழவன்
கருவி – கலப்பை
நிலம் - வயல்
செயல் – உழுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் – நெல்
2. குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றில் கருத்தா ஒன்றை மட்டும் தெரிவித்து காலத்தை குறிப்பாக காட்டும் வினை முற்று குறிப்பு வினை முற்று ஆகும்.
எ.கா
அவன் பொன்னன்
|
பொன்னை உடையவன் |
பொருள்
|
அவன் விழுப்புரத்தான்
|
விழுப்புரத்தில் வாழ்பவன்
|
இடம்
|
அவன் சித்திரையான்
|
சித்திரையில் பிறந்தவன்
|
காலம்
|
அவன் கண்ணன்
|
கண்களை உடையவன்
|
சினை
|
அவன் நல்லன்
|
நல்ல இயல்புகளை உடையவன்
|
குணம்
|
அவன் உழவன்
|
உழுதலை செய்பவன்
|
தொழில்
|
தன்மை ஒருமை வினைமுற்று
என், ஏன், எவிகுதிகளை கொண்டு முடிவது தன்மை ஒருமை வினை முற்று ஆகும். (நாமே செய்வதைக் குறிக்கும்)
எ.கா
வந்தேன், செய்தேன், அறிந்தனென், வந்தனென், சாற்றுகேன், நோற்றிலேன்
தன்மை பன்மை வினை முற்று
அம், ஆம், ஓம், தும், என்ற விகுதிகளைக் கொண்டு முடிவது தன்மை பன்மை வினை முற்று ஆகும்.
எ.கா
அறிதும், அறிவோம், காண்டிலம், அடைகின்றோம், எழுந்திடுவோம், புகுவோம், போற்றதும், வணங்குதும்.
முன்னிலை ஒருமை வினை முற்று
ஐ, ஆய், இ என்னும் விகுதிகளைப் பெற்று வருவது முன்னிலை ஒருமை வினை முற்று எனப்படும்.
எ.கா.
சென்றனை, உண்டனை, செய்தாய், உண்டாய், கேட்டி, கோடி, காண்பி
ஏவல் வினை முற்று
முன்னிலையில் ஆணையிடுவது போல் வரும் சொற்கள் ஏவல் வினை முற்று ஆகும்.
பகுதி மட்டும் அமைந்த சொற்கள் – நட, வா, போ, நில்
மின், ஈர், உம், என்ற விகுதிகளைப் பெற்று வரும்
எ.கா
நடுமின், பரப்புமின், உண்ணீர், உண்ணும்
எதிர்மறை ஏவல் வினை முற்று
எ.கா
உண்ணேல், மறேல், உண்ணாதே
எச்சம்
பொருளில் முழுமையடையாத வினைச் செற்கள் எச்சம் எனப்படும்.
வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும்.
எச்சம் இரண்டு வகைப்படும்
- பெயரெச்சம்
- வினையெச்சம்
1. பெயரெச்சம்
முற்றுபெறாத எச்ச வினைகள் பெயரைக்கொண்டு முடிந்தால் அவை பெயரெச்சம் எனப்படும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்தாக அ, உம் இவற்றில் ஒன்றை பெற்று வரும்
பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.
- இறந்தகால பெயரெச்சம் - படித்த மாணவன்
- நிகழ்கால பெயரெச்சம் - படிக்கின்ற மாணவன்
- எதிர்கால பெயரெச்சம் - படிக்கும் மாணவன்
எ.கா
உண்ட மாணவி, உண்ணும் வேளை,
உண்கின்ற பொருள்,
தீர்ந்த பொருள்
தெரிநிலை பெயரெச்சம்
செய்த, செய்கின்ற, செய்யும் எனும் பெயரெச்ச வாய்ப்பாடுகள் முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாககக் காட்டி பால் காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி நிற்கும் பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.
இவை உடன் பாட்டிலும் எதிர் மறையிலும் வரும்.
எ.கா
உண்ட இளங்கோவன், உண்கின்ற இளங்கோவன், உண்ணாத இளங்கோவன்
செய்பவன் - இளங்கோவன்
கருவி – கலம்
நிலம் - வீடு
செயல் – உண்ணுதல்
காலம் - இறந்த காலம்
செய்பொருள் – சோறு
குறிப்பு பெயரெச்சம்
காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு பெயரெச்சம் எனப்படும்
எ.கா
நல்ல பையன், நல்ல மாணவன், தீய மாணவன்
2. வினையெச்சம்
முற்றுபெறாத எச்ச வினைகள் வினையைக் கொண்டு முடிந்தால் அவை பெயரெச்சம் எனப்படும்.
இது மூன்று காலத்தையும் காட்டும்.
இ, உ, ய் என்ற எழுத்துக்களில் ஒன்றினை இறுதியில் பெற்று வரும்.
எ.கா
படித்து வந்தான், சென்று கேட்டான், நன்றாய்ப் பார்த்தான், பார்த்து பேசினான்.
செய எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
அ எனும் எழுத்து இறுதி எழுத்தாகக் கொண்டு அமையும்.
எ.கா
காண வந்தான், கேட்க சொன்னான், கற்க சொன்னான், பார்க்கப் போனான்
குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பின் அடிப்படையில் பொரளை உணர்த்தி நின்று வினைமற்றைக் கொண்டு முடியும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் ஆகும்.
எ.கா
மெல்லப் பேசினான், கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்.
தெரிநிலை வினையெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்ச வினை தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
எ.கா
படிக்கச் செல்கிறான், படித்துத் தேறினான்
முற்றெச்சம்
ஒரு வினைமுற்று வினையெச்ச பொருளில் நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது முற்றெச்சம் எனப்படும்.
எ.கா
இராமன் வந்தனன், போயினன்
வியங்கோள் வினைமுற்று
ஐந்து பாலுக்கும், மூன்று இடத்திற்கும் பொதுவாய் வரும் வினை முற்று வியங்கோள் வினை முற்று எனப்படும்.
இது வேண்டல், விதித்தல், வாழ்த்தல், வைதல் என்னும் பொருளில் வரும்
க, இய, இயர் என்னும் விகுதிகளைப் பெற்று வரும்.
எ.கா
வாழ்க, வாழிய, வாழியர்
எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
எ.கா
எள்ளற்க (இகழாதே) , தொடங்கற்க (தொடங்காதே )
Tags
TAMIL NOTES